Saturday 21 April 2012

மகம்



அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் - மகம்




ஸ்தல வரலாறு:


சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். தனக்கு உதவியஆஞ்சநேயரை கவுரவிக்கும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். (இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது) இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர், இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.


சிறப்பம்சம்:


பரத்வாஜர் இந்தக்கோயிலுக்கு வந்து, ஒரு தவமேடை அமைத்தார். அதில் அமர்ந்து யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு,




ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூப வடிவில் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாகக் கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.


இரண்டு அம்பிகையர்:


சிவனுக்கு வலதுபக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப் பெயர் சூட்டப்பட்டது. கிழக்குநோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக் குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது.இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.


சூரிய தரிசனம்:


சிவராத்திரியை ஒட்டி 30நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.


மகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : பித்ருக்கள்[Pithrus]
அதிதேவதை[Atidevatha] : சுக்கிரன்[Sukra]


இருப்பிடம்:


திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.


திறக்கும் நேரம்: காலை 6- மாலை 6 மணி. 

பூரம்


அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் - பூரம் 





ஸ்தல வரலாறு:


சோழமன்னன் கல்மாஷபாதனுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை
பாக்கியம் இல்லை. சிவபக்தனான இவன், தனக்கு பின் சிவ சேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தி, அகத்திய முனிவரிடம் முறையிட்டான். மன்னனின் குறை நீங்க, திருவரங்குளம் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அவர் கூறினார். மன்னனும் இத்தலம்




வந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தான். அப்பகுதியில் தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த, சிவபெருமான் திருவுளம் கொண்டார். அப்போது அப்பகுதியில் பசு மேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு தகவல் அறிந்தான். அப்பகுதி வழியாக யாராவது பூஜைப் பொருள்களைக் கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவறி விழுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து மன்னன் அங்கு சென்று பூமியில் தோண்டிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது.அவ்விடத்தில் ஒரு லிங்கம் தென் பட்டது. சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என வருத்தப்பட்ட மன்னன், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக் கோலத்தில் தரிசனம் கொடுத்து, அந்த இடத்தில் எழுந்த கோயிலே இது. ஒரு பூர நட்சத்திர நாளில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான்.அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.


சிறப்பம்சம்:


பூர தீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உண்டு. இந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு வழிபடலாம்.


முக்காடு போட்டு வழிபாடு:


அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள். இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியாரின் வம்சத்தில் இத்தல அம்மன் பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்சப் பெண்ணின் மாப்பிள்ளையான சிவனை நினைத்து, முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது.


பூரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப்பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை, நீதி உடையவர்களாக இருப் பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : சூரியன்[Surya/Sun]
அதிதேவதை[Atidevatha] : பார்வதி[Parvathi]




இருப்பிடம்:


புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் திருவரங்குளத்தை அடையலாம்.


திறக்கும் நேரம்: காலை 7 - 12 மணி, மாலை 5- 7.30 மணி


போன்: +91 - 98651 56430, 99652 11768.

உத்திரம்


அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் - உத்திரம் 





ஸ்தல வரலாறு :


மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள்,




மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு(திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது) திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.


சிறப்பம்சம்:


உத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இவரை வணங்கி வரலாம். தீராத கால்வலி உள்ளவர்கள் குணமடையவும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:


திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை. திருமணம் நிச்சயம் ஆனவுடன், இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு பத்திரிகை வைத்து தங்கள் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டுகின்றனர். திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.


கோயில் அமைப்பு:


மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி,பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர்.


உத்திரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : பகன்[Bhakan]
அதிதேவதை[Atidevatha] : சூரியன்[Sukra/Sun]


இருப்பிடம் :


திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் வரலாம். குறிப்பிட்ட நேரங்களில் நேரடி பஸ்சும் உள்ளது.


திறக்கும் நேரம் : காலை 8 - மதியம் 12 மணி, மாலை 6 - இரவு 8 மணி .


போன் :+91 - 431- 254 4070, 98439 51363

அஸ்தம்


அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்- அஸ்தம் 





ஸ்தல வரலாறு :


சிவபெருமான் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் என்பதை அறிய பார்வதிதேவி விரும்பினாள். இதுபற்றி அவரிடமே கேட்டாள். அப்போது, சிவன் ஒரு திருவிளையாடல் செய்தார். பார்வதி தன்னை மறந்து விளையாட்டாக தனது கண்களை பொத்தும்படி செய்தார். அந்த நொடியில் உலக இயக்கம் நின்று போனது. இதைக்கண்டு அதிர்ந்து போன பார்வதி, தன்னால் நிகழ்ந்த இந்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். அதற்கு சிவன், உன் கரத்தினால் என்




கண்ணைப் பொத்தி இந்த பிரபஞ்சத்தை இருளாக்கினாய்.இப்போது என் கரத்தில் இருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப்போகிறேன். நீ பசுவாக மாறி இந்த ஜோதி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து என்னை வந்து சேர்வாய்,என கூறி மறைந்தார். சிவனைக்காணாத பார்வதி, அவரது ஆணைப் படி பசு உருவம் கொண்டு, தன் சகோதரரான திருமாலுடன், சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தாள். பார்வதி மீது கிருபை கொண்டார் சிவன். ஒரு அஸ்த நட்சத்திர நாளில், ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றியது. இதை கோமளீய ஜோதி என்றும் சொல்வர். பார்வதி மனம் மகிழ்ந்து அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். பார்வதிக்கு கிருபை செய்த, இந்த சம்பவத்தின் அடிப்படையில் கோமலில் ஒரு கோயில் எழுப்பப்பட்டது. கிருபை செய்த சிவனுக்கு, கிருபா கூபாரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாளுக்கு அன்னபூரணி என பெயர்.


சிறப்பம்சம்:


கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர் களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு நைவேத்யம் செய்து, கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் வலம் வந்தால் இனிய வாழ்வைப் பெறலாம். கலக்கமான மனம், பயந்த சுபாவம், தீராத பிரச்னைகள் தீர திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்யலாம். திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பசு, கன்று தானம் செய்யலாம். பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.


அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுகுணம்:


ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயாடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வெளியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர்.


பிரதான தேவதை [Pradhana Devatha] : சவிதா[Savitha]
அதிதேவதை[Atidevatha] : சாஸ்தா[Sastha]


இருப்பிடம்:


கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.


திறக்கும் நேரம்: காலை 7- மதியம் 12 , மாலை 5.30- இரவு 7.30 மணி


போன்: +91 - 95002 84866.

சித்திரை


அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்- சித்திரை 



ஸ்தல வரலாறு:


முன்னொரு காலத்தில் நடந்த தேவாசுர போரில், ஏராளமான அசுரர்கள் மாண்டனர். அவர்களை, அசுர குரு சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியின் (குரு) மகன் கசனை அழைத்து, அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா, என்றார்கள். கசனும் தன் தந்தை வியாழபகவான் ஆசியுடன் அசுரலோகம் சென்றான். அவனை அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஒரு தலையாகக் காதலித்தாள். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையறிந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து , அவனைக் கொன்று சாம்பலாக்கினர்.


அசுரகுரு அறியாமலேயே அவர் குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டனர். கசனைக் காணாத தேவயானி, தன் தந்தையிடம், கசனின் இருப்பிடத்தை கண்டறியும்




படி வேண்டினாள். அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிவந்ததால், சுக்ராச்சாரியார் இறந்து விட்டார். தன்னைக் காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அவரை உயிர்பெறச் செய்தான். சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன், உங்கள் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள் ளதால் தேவயானி எனக்கு சகோதரி முறை வேண்டும், என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை ஏழு மலைகளால் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத பிரகஸ்பதி, மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சககரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு பிரகஸ்பதியின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே எழுந்தருளினார்.


சிறப்பம்சம்:


குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.


சித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர்.


பிரதான தேவதை[Pradhana Devatha] : துவஷ்ட[Twashta ]
அதிதேவதை[Atidevatha] : துவஷ்டா[Twashta]


இருப்பிடம்:


மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி போன்ற கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.


திறக்கும் நேரம்: காலை 7.30 - மதியம் 12 மணி, மாலை 3- 6 மணி.


போன்:+ 91- 94439 61948, 97902 95795