Sunday 15 April 2012

மிருகசீர்ஷம்


அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் - மிருகசீர்ஷம் நட்சத்திரம்





ஸ்தல வரலாறு:


ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம்(வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது.கோபமடைந்த முனிவர், அரசனை நோக்கி,முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில்




சிங்கத்தை வேட்டையாட வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்,என சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனம் இரங்கிய முனிவர், விருத்த காவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினார். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தான். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தந்தார். பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்தது. இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற் குரிய கோயிலாக போற்றப்படுகிறது.


நித்ய கருட சேவை :


பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள் பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார். திரு விழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி சேவை சாதிப்பார். ஆனால், இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் இங்கு தரிசிக்கலாம்.
மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவதாகக் கூறப்படுகிறது.


மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று. இத்தல பெருமாளை வழிபாடு செய்தால்,அவர்களின் பிரச்னை உடனடியாகத் தீரும் என்பது நம்பிக்கை.


பரிகாரத்தலம்:


உற்சவர் ஆதிநாராயணப் பெருமாள் பிரயோகச் சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், தோல் நோய் மற்றும் பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அகால மரண சம்பவங்களால் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டு நிவாரணம் பெற விரும்புபவர்கள் பவுர்ணமி மற்றும் மிருகசீரிஷ நாட்களில் இங்கு வழிபாடு செய்கிறார்கள். படிப்புக் கேற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.


மிருகசீர்ஷம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


விசாலமான புத்தியும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர்.


இருப்பிடம் :


தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் எண்கண்ணிலுள்ள கோயிலை அடையலாம்.




பிரதான தேவதை [Pradhana Devatha] : ஸோமன்[Soman]


அதிதேவதை [Atidevatha] : சந்திரன்[Moon]






திறக்கும் நேரம்: மாலை 5 - இரவு 7 மணி.


போன் :+91 - 4366-269 965, 94433 51528

ரோகிணி


அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் - ரோகிணி நட்சத்திரம் 



தல வரலாறு:


பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கவுரவர்களிடம் தன் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து வீடுகளையாவது கேட்டுவாங்க,துரியோதனனிடம் தூது சென்றார் பகவான் கிருஷ்ணர். அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்)




உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்கினர் சில மல்யுத்த வீரர்கள். அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூத பெருமாள் என்பர்.


பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பின், ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதையை கேட்க வந்தார்.கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், என ரிஷியிடம் மன்னர் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார். பெருமாள், தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.


தல சிறப்பு:


பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப் பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகளும் இங்கு உள்ளார்.


எட்டாம் தேதி விசேஷம்:


ரோகிணி தேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வணங்க வருவதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடுசெய்வது சிறந்த பலனைத்தரும்.


ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:


கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும்.


இருப்பிடம்:


காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.


திறக்கும் நேரம்:  காலை 7- 11, மாலை 4- இரவு 7.30 மணி


போன்: +91 - 44-2723 1899.
நன்றி http://sivasthalangal.blogspot.in