Saturday 31 March 2012

திருநீலகண்டனின் பிறப்பு


திருநீலகண்டனின் பிறப்பு

Add caption

முன்னொரு காலத்தில் தேவராகிய சுரரும் அசுரரும் , தாங்கள் இருவினத்தாரும் போரிட்டு ஒருவரையொருவர் அழித்துக் கொண்டமையினால் தங்களுடைய எண்ணிக்கை குறைந்து விட்டமை கருதி வருந்தினார்கள். சாவுக்குப் பயந்த அவர்கள் சாவாமருந்தாகிய அமிழ்தம் பெற வேண்டி நான்முகனிடம் சென்று தங்களுடைய குறையைச் சொன்னார்கள். பிரமதேவன் அவர்களை அழைத்துக் கொண்டு வைகுந்தம் அடைந்தான். அங்கு பாம்பணையில் அறிதுயில் கொண்டிருந்த திருமாலைத் தேவர்கள் தோத்திரித்து வணங்கி, சாவினை வெல்லும் வழியருள வேண்டினர். திருமால் நெடுநேரம் ஆராய்ந்து, “நீங்கள் இனி அஞ்ச வேண்டுவதில்லை. திருப்பாற்கடலைக் கடைந்தால் அமுதம் வரும்; அமுதத்தை அருந்தினால், மரணத்தை வெல்லலாம்” என்றார். அந்நாளவர்கள் அடைந்த பேருவகையை யாரே இயம்பவல்லார்?.

பின்னர் சுரரும் அசுரரும் திருப்பாற்கடலை யடைந்து மந்தரமலையை மத்தாக இட்டு, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி இழுக்கத் தொடங்கினார்கள். அப்பொழுது திருமால், அவர்களை நோக்கி, ‘உங்கள் இருதிறத்தாரில் யார் பாற்கடலைக் கடையும் வல்லமையுடையவரோ அவரே அமுதுண்ணலாம்’ என்று சொன்னார்.

அசுரர்களுக்குத் தங்கள் உடல்வலிமை பற்றிய அபாரநம்பிக்கை உண்டு. எனவே, அவர்கள் திருமாலின் கூற்றுக்கு மகிழ்ந்து முதலில் பாற்கடலைக் கடைய முன் வந்தனர். அசுரர்கள் வாசுகியின் இருபுறமும் பற்றித் தம் பலம் முழுவதுங்கொண்டு ஈர்த்தும் கடைய இயலவில்லை. மந்தரம் அசலம் (அசையாதது) என்னும் தன்னுடைய பெயரை நாட்டி நின்றது.
பாற்கடல் கடைதல்: கம்போடிய கோயில் சிற்பம்
Add caption

பாற்கடல் கடைதல்: கம்போடிய கோயில் சிற்பம்
அதன்பின்னர் சுரரும், அசுரரை “விடுமின்” என விலக்கி அரவைப் பற்றி ஈர்த்தனர். அவரும் கடைய இயலாமல் இளைத்து நின்றனர். இனி என்ன செய்வது எனக் கவலைமிக நின்றனர். அப்பொழுது பலகடலிடத்துஞ் சென்று நாள்தோறும் சிவபூசை செய்யும் கடப்பாடு உடைய வாலி என்னும் வானர அரசன் தற்செயலாக அங்கு வந்தான். அவனைக் கண்டவுடன் தேவர்கள் மனமகிழ்ச்சி அடைந்தனர். மால் அயன் முதலிய தேவர் அனைவரும் அவனை வரவேற்றனர். பிரமன் நடந்தவற்றை வாலிக்குக் கூறி, ‘நீ எங்களுக்கு உதவி செய்தல் வேண்டும்’ என வேண்டினான். அதற்கு வாலி, ‘நான் ஒருவன் மாத்திரம் இதனைச் செய்தல் இயலாது.’ எனக் கூறித் தான் பாம்பின் வாலின் பக்கம் பற்றி ஈர்ப்பதாகவும் தேவாசுரர்கள் தலைப்புறம் பற்றி ஈர்க்க வேண்டும் என்றும் கூறி அவ்வாறே செய்தான்.

பாம்பின் தலைப்பக்கம் தேவரும் அசுரரும் பற்றி ஈர்த்தும் மலை அசையவில்லை. தேவாசுரர்களை ஒதுங்கும்படிக் கூறிவிட்டுத் தலைப்பக்கமும் தானே பற்றி வாலி ஈர்த்தான். மந்தரமலை கடலுள் அமிழ்ந்தது. எனவே , திருமால் ஆமை வடிவங்கொண்டு மலை மிதக்கும்படி அதைத் தாங்கினார். பின்னர் வாலி மந்தரகிரி இடமும் வலமுமாகச் சுழலும்படிக் கடைந்தான். பாற்கடல் அலறிக் கொதித்து ஆர்ப்பரித்தது. வாசுகி வலி தாங்க முடியாமல் வாயில் நுரைகள் காற்றிப் பெருமூச்சு விட்டது. வாசுகியின் வாயிலிருந்து தோன்றிய நுரையும் பெருமூச்சும் சூடடைந்த கடலில் தோன்றிய நுரையும் கூடிய கலவையிலிருந்து ஆலாலம் என்னும் விடந்தோன்றியது.

விடத்தின் வெம்மையால் கடல் வறண்டது. அண்டகடாகம் அழலால் தீய்ந்தது. உயிர்த்தொகை முழுவதையும் சுட்டெழும் விடத்தீயின் வெம்மையால் உடலம் வெந்த வாலி அஞ்சி அங்கிருந்து ஓட்டமெடுத்தனன்.. வல்விடந் தாக்கி மாயவனின் வெண்ணிற மேனி கருகியது. அன்று முதல் அவன் கரியன் எனப்பெயர் பெற்றான். பிரமன் தன்பொன்னிறம் நீங்கிப் புகை நிறம் பெற்றான். திக்குப் பலரும் வேற்றுரு எய்தி அழுதனர்.

தேவர்கள் அனைவரும் செய்வதறியமல், தாளொடு தாள் இடற ஓடிக் கயிலை மலையை அடைந்தனர். தன்பால் அடைக்கலம் என்று அடைந்தோரைத் தொடர்ந்து வரும் கொடு விடம் அங்கு அணைவுறாமல் புடைத்து உந்தித் தள்ள நீளும் தடங்கைகளெனக் திருக்கயிலைச்சிகரங்கள் பொலிவதனைக் கண்டனர். நந்திதேவரின் அருள் பெற்று இறைவன் முன் எய்தி வணங்கினர்.

பிரமன் நடந்தவற்றையெல்லாம் எம்பிரானிடம் கூறி, ‘ ஐயனே அடியேங்கள் அறியாமையால் தொடக்குண்ட சிறியவர்கள். ஆதலினால், உம்முடைய திருவருள் இன்றி முயல்வதெல்லாம் ஒன்றொழிய ஒன்றாம் என்பதறியாது, சுவை அமிழ்தம் பெறற்பொருட்டுப் பாற்கடல் கடைந்தோம். அமிழ்தம் தோன்றாது விடந்தோன்றிச் சராசரம் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்குகின்றது. இதுபொழுது எம்மை நீ காத்திலையேல் எமக்கு இன்றே இறுதியாகும்” என்று முறையிட்டனர்.

எம்பெருமானும் ‘அஞ்சலிர்’ என்றருளி , இருந்தவாறே இருந்து உளத்தில் எண்ணித் தன்னுடைய மலர்க்கரத்தை நீட்டினான். நஞ்சு செந்தாமரை மலர்மீது உள்ள கருவண்டு போல அவரது திருக்கரத்தை அடைந்தது ; அவரது பார்வையினால் சிற்றுருவாய் அடங்கியது.

எம்பெருமான், தேவர்களை நோக்கிப் புன்னகையுடன், “இந்த நஞ்சை உண்ணவா? அல்லது தூரத்தில் எறிந்துவிடவா?” என்று வினவினார். எறியும்படிக் கூறினால், நஞ்சால் தம்முயிர்க்கு இறுதி வரும், ஆனால், இறைவனை நஞ்சுண்ணும்படிக் கூறுதல் தமக்கு இழிவு எனும் சிந்தனையால் அச்சமும் நாணமுங் கொண்டு தேவர்கள் தலை கவிழ்ந்து ஒன்றும் கூறாமல் வாளா நின்றனர்.

இறைவன் இறைவியின் திருமுகத்தை நோக்கிக் குறிப்பாக வினவினன்.

உலகெலாம் ஈன்று புரந்தரும் அன்னை அவ்வுலகின்மேல் வைத்த அளவிலாப் பெருங்கருணையாலும் கொழுநன் மீது கொண்ட பேரன்பினாலும் இறைவனின் செங்கையில் இருந்த கருவிடத்தைக் குறித்து நோக்கினள். அவளுடைய திருநோக்கால் நஞ்சும் அமுதமாயிற்று. இறைவன் வானவர்க்கு இரங்கி அகிலமும் உய்ய வல்விடம் பருகினான்.; பருகிய நஞ்சினை மிடற்றினில் தங்குமாறு நிறுத்தினான். அது திருமிடற்றுக்கு அழகு செய்து, தேவமகளிரின் மங்கல நாணினைக் காத்தது.

Siva drinking World Poison - By Nandlal Bose (National Gallery of Modern Art, New Delhi)
அவனும் திருநீலகண்டன் ஆனான்.

இறைவன் நஞ்சினை உமிழ்ந்தால், புறத்தில் இருக்கும் எண்ணற்ற உயிர்கள் அழியும். விழுங்கினால் அகத்தில் உள்ள எண்ணற்ற உயிர்கள் அழியும். எனவே விழுங்கவும் செய்யாமல், உமிழவும் செய்யாமல் நஞ்சினைக் கண்டத்தில் நிறுத்தினான்.

விழுங்கிய பொருள் உணவுக்குழாய் வழியே குடலைச் சென்றடையும் ; ஒவ்வாத பொருளெனின் வாந்தியாய் வெளியே உமிழப்பட்டுவிடும். இதுதான் இயற்கை. ஆனால், இறைவன் தானுண்ட நஞ்சினை மிடற்றிலே இருக்குமாறு நிறுவினான். இறைவன் தன்னுள்ளும் புறத்தும் இருக்கும் உயிர்கள் நலிவடையாமல் இருக்கும்பொருட்டு உண்டநஞ்சை விழுங்காமலும் உமிழாமலும் மிடற்றில் நிறுவி அங்கேயே இருக்கும்படிச் செய்ததும் அவனுடைய அளவிடமுடியாத பெருங்கருணைக்கும் பேராற்றலுக்கும் தலைமைத்தன்மைக்கும் அடையாளமாகும்.

உலகியற்கையில் காணப்படாத இறைவனின் இச்செயற்கரிய செயலே மணிவாசகப் பெருமானால் ‘விடமுண்ட சதுர்’ எனப் போற்றப்பட்டது.

இந்தவரலாறு காஞ்சிப்புராணத்தில் உள்ளது. சிற்சில வேறுபாடுகளுடன் வேறு புராணங்களிலும் காணலாம்.

முதல்வனின் இந்த சதுரைத் திருமுறைகள் பலவாறு இலக்கியச் சுவையும் பத்திச்சுவையும் மிளிர விதந்தோதுகின்றன

அப்பர்பெருமான் தம்முடைய தசபுராணம் எனும் திருப்பதிகத்தில்,(4;134), கடலில் நஞ்சு எழுந்த கொடுமையையும் இமையோர் ஓடியதையும் படம்போலக் காட்டுகின்றார்.. ‘பெரிய மலையைச் சுற்றிய அரவம் நஞ்சைக் கக்கவே, அதைக் கைவிட்டு இமையோர் பயத்தால் இரிந்தோடினர். நெடுமாலின் அழகியவெண்ணிறத்தை அடுவதாகி எழுந்த வெப்பம் ஆகாயத்தைச் சுடுவதாகி விசும்பில் எழுந்து, அதன் வேகம் பெருகியது. தேவர்கள் இதற்கு ஒரு பரிகாரம் அருளுக பிரானே என வேண்டவே , பெருமான், அருள்கொண்டு மாவிடத்தை, அது பிறரை எரியாமல், வாங்கி உண்டான். அந்நஞ்சு இமையோர் முதலோரை எரிக்குமேயன்றித் திருநீலகண்டனை எரிக்குமோ? பிறரை எரியாமல் அந்நஞ்சினையுண்ட அவனே தேவதேவன்.

செயற்கரிய இச்செயலாற்றி வென்ற திறம் தோன்ற வெற்றிக்கொடி தூக்கினன் என்பது தோன்றத் திருஞான சம்பந்தப் பெருமான், “உண்ணற்கரிய நஞ்சை உண்டு ஒருதோழம் தேவர் விண்ணிற் பொலிய அமுதம் அளித்த விடைசேர் கொடியண்ணல்”என்று அருளினார்.

தேவர்களின் அச்சத்தையும் அதை இறைவன் மிக எளிதில் நீக்கிய் வல்லமையையும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் ஒரே வரியில், “திரைமாண் டழற்கான்ற நஞ்சை,’எனத்தா’ (என் அத்தா – எங்கள் தலைவா) என (என்று சொல்ல) வாங்கி (கைநீட்டி எடுத்து) அதுஉண்ட கண்டன்”த் திருநெல்லிக்கா திருப்பதிகத்தில் காட்டினார்.

இக்காட்சியைப், புகலியில் வித்தகர்போல அமிர்தகவித் தொடைபாடும் வரம் பெற்ற அருணகிரிப் பெருமான்,
“கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை பெருமாளே”
எனப்பாடினார்.

‘வாங்கி’ எனப் பிள்ளையார் பயன்படுத்திய சொல்லையே தாமும் ஆண்டு மேலும் விரித்தார். வாங்கிய நஞ்சை ‘நீ கண்டத்தில் சும்மா இங்கேயே இரு’ என இறைவன் வைத்தானாம். ‘கொடிய விஷத்தைக் கைநீட்டி எடுத்துத் தன் அழகிய மிடற்றில் ‘இரு’ என்று அதனை நிறுத்தி, அங்கேயே அதைத் தாங்கி நிலைக்க வைத்த சிவபிரானுக்குக் குருமூர்த்தியே’ என்பது இத்திருப்புகழ் அடிக்குப் பொருளாம்.

சிவபெருமானின் நஞ்சுண்ட சதுர் திருமுறையாசிரியர்களால் பல்சுவைப்பட ஓதப்படுகின்றது.

அடையாளம் காட்டும் உண்மை:

அதியமான் என்னும் குறுநிலமன்னனை வாழ்த்திய அவ்வையார், “நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும” என்று வாழ்த்தினார். ‘நீலமணிமிடற்று ஒருவன் போல” என்றதன் கருத்து, சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல் வேண்டும்’ என்பதாம்.
சிலப்பதிகாரமும், “விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்” (12) என்று இறைவனின் சாவாமையையும் பேராற்றலையும் போற்றியது.

ஸ்ரீமத் அப்பைய தீட்சிதர் அவர்கள், “கங்கையைத் தூயது என்று தரித்திலீர்; நஞ்சைச் சுவையுடையது என்று உண்டலீர்; இவ்விரு செயல்களையும் உலகைக் காப்பதற்காகவே செய்தீர். இவை உம்மையல்லாத பிறர் செய்தற்கு அரியனவே” என்றார். (ப்ரஹ்மதர்க ஸ்தவம் 3ஆம் சுலோகம்)

ஆதி சங்கரரும் சிவனின் நஞ்சுண்ட கருணையை,

“உன்னகத்தும் புறத்துமுள நிற்பனவு நடப்பனவும்
உய்யு மாறும்
மன்னமரர் தொலையாமல் மருந்தாகு மாறுமன்றோ
வைத்தாய் கண்டத்
துன்னரிய கொடியசுடு விடமதனை யுள்விழுங்கா
யுமிழ்ந்தா யல்லை
எல்லையில்லா நின்னருளின் வல்லமைக்கிஃ தேசான்றாம்
இமையோ ரேறே”

- சிவாநந்த லகரி 30

(அகடு – வயிறு; அமரர் –தேவர்; மருந்தாகுமாறு –அமிழ்தம் உண்டாகுமாறு)

எனப் பாடினார்.

அயனும் திருமாலும் உள்ளிட்ட தேவர்கள் அஞ்சிய நஞ்சு பெருமானுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதை,

“அமரர் குழு எல்லம் அஞ்சும் விடத்தை நீ எவ்விதம் பார்த்தாய்?
கைம்மலரில் அதனைத் தாங்கினாய்!
அது கனிந்த நாவற் பழமோ?
அதை நாவில் வைத்தனையே,
அது என்ன சித்த குளிகையோ?
சம்புவே!
தப்பாமல் அதனை மிடற்றில் நிறுவினையே,
கரிய மணியோ அது?தயைக் கடலே!”

(சிவானந்தலகரி 31)

எனச் சங்கரர் போற்றினார்.

 புராணக் கதையின் கருத்து

ஜென்மப் பகைவர்களான தேவரும் அசுரரும், இக்காலக் கொள்கையற்ற அரசியல் கட்சியைனரைப் போல, சுயநலத்துக்குக் கூட்டுச் சேர்ந்தனர்.(கட்சி மாற்சரியங்களை மறந்து விட்டு நமது சட்டசபை உறுப்பினர்கள் ஊதிய உயர்வுக்கும் சென்னையில் வீட்டு மனைக்கும் கோரிக்கை மனு கொடுத்த வேகத்தையும் ஒற்றுமையையும் ஒப்பு நோக்குக) தேவாசுரர்கள் அமுதத்தை எதிர்பார்த்தனர். ஆனால் நஞ்சு வந்தது. இறைவனைச் சரண் புகுந்தனர். அவர்கள் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டான்.

உயிர்கள் நல்வினைகளும் செய்கின்றன; தீவினைகளும் செய்கின்றன. நல்வினைப் பயனான இன்பத்தையே நாடி ஏற்றுக் கொள்ள விரும்புகிறன. தீவினைப்பயனாகிய துன்பத்தைக் கண்டு அஞ்சுகின்றன; அதைத் தவிர்க்க விரும்புகின்றன. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்ததுபோன்றதுதான் உயிர்கள் செய்யும் வினைகள். ஈசனிடத்தில் சரணடையும்போது , சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதலால், நல்வினைப் பயனை உயிர்கள் அனுபவிக்கும்படி அளித்துத் தீவினைப் பயனை அவன் ஏற்றுக் கொள்கிறான். கரியமிடறு அந்தக் கருணைக்கு அடையாளமாகத் திகழ்கின்றது.

இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவையாகிய கொலைத்தண்டனைக்கு உரிய கழுமரத்தைக் காட்டிலும் இறைவனின் நீலகண்டம் அவனின் பேராற்றலுக்கும் பெருங்கருணைக்கும் அடையாளமாக, மானுடரின் பாவக்கழுவாய்ச் சின்னமாகப் பெரிதும் திகழ்கின்றது. இரண்டையும் சீர்தூக்கி உண்மை அறிக.

நன்றி தமிழ் ஹிந்து