Friday 25 May 2012

தென்குடித்திட்டை (திட்டை)






இறைவர் திருப்பெயர்
வசிஷ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், 
தேரூர்நாதர், தேனுபுரீஸ்வரர், ஸ்வயம்பூதேஸ்வரர், 
அனந்தேஸ்வரர், நாகேஸ்வரர், ரதபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்
உலகநாயகிமங்களாம்பிகை, மங்களேஸ்வரி, சுகந்தகுந்தளாம்பிகை.

தல மரம் : சண்பகம். (தற்போதில்லை.)

தீர்த்தம் : சூல தீர்த்தம்.  (இதற்கு சக்கர தீர்த்தம் என்றும் பெயர்)

வழிபட்டோர் : வசிட்டர், தேவர், பைரவர், முருகன், பிரமன், திருமால்,                               காமதேனு, ஆதிசேஷன் ஆகியோர்.

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - முன்னைநான் மறையவை.

தல வரலாறு

காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் - திட்டில் - அமைந்துள்ள ஊராதலின் திட்டை எனப் பெயர் பெற்றது.

உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதென்றும், இறைவன் சுயம்பாக வெளிப்பட்டு அருள்புரிந்தான் என்பதும் வரலாறு. இதனால் 'குடித்திட்டை' எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர்.

சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி - தேரூர் என்றும்; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும்; ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் விளங்குகிறது.

சிறப்புக்கள்

இக்கோயில் நல்ல கட்டமைந்த கற்கோயில்; எல்லாச் சந்நிதிகளும் மழமழப்பாக்கப்பட்ட கருங்கற்களால் ஆனவை.

மூலவர் சுயம்புத் திருமேனி. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமிமீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், 1922-ல் இவ்விமானத்தைப் பழுதுபார்த்துக் கட்டும்போது அக்கல் அப்படியே வைத்துக் கட்டப்பட்டுள்ளதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தக்ஷ¤ண குடித்வீப மஹாத்மியம்" என்ற பெயரில் உள்ளது. திரு. வி. பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள "சுயம்பூதேஸ்வரர் புராணத்தை" - இத்தலபுராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

(இத்திருக்கோயிலை 1926-ல் கற்கோயிலாகக் கட்டிய பலவான் குடிகிராமம் ரா. கு. ராம, இராமசாமி செட்டியாரின் உருவம் அவர் மனைவியுடன், கைகுவித்து வணங்கும் நிலையில் செதுக்கப்ட்டுள்து.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 
கும்பகோணம் - திருக்கருக்காவூர் நகரப் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது. தஞ்சை - மயிலாடுதுறை இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம்.

Sunday 13 May 2012

மாந்தி தோஷம் நீக்கும் பிரத்யங்கிராதேவி





ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி காயத்ரீ.

ஓம் அபரஜீதாய வித்மஹே
பிரத்யங்கிராய தீமஹி 
தந்நோ உக்ர ப்ரசோதயாத் 

SRI PRATYANGIRA DEVI GAYATRI.

OM APARAJEETHAYA VIDHMAHE
PRATHYANGIRAAYA DHEEMAHI
THANNO UGRA PRACHODAYATH.

ஜெய் ப்ரத்யங்கிரா, 
ஜெய ஜெய ப்ரத்யங்கிரா சரணம் சரணம்.
JAI PRATHYANGIRA, 
JAYA JAYA PRATHYANGIRAA SARANAM SARANAM.

இறைவன் பிரத்யங்கிராதேவி
தல மரம் ஆலமரம்
கிராமம்/நகரம் அய்யாவாடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு



                   மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான். காளி பக்தனான அவன், ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவி’க்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.

அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.    இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள்.

தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
திருவிழா
               இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்’ நடக்கிறது.
சிறப்பு
                  தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம். மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.
திறக்கும் நேரம்
              காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                 கோயில் விமானம் வடமாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரத்யங்கிரா தேவி தனி சன்னதி கொண்டு வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.
பிரார்த்தனை
                     நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகளின் தொல்லை விலகும், கடன் தொல்லை தீரும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உருவாகும், திருமண பாக்கியம் விரைவில் கிடைக்கும், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை. சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.
நேர்த்திக்கடன்
                 அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு
                    தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் இத்தல சிவனை குறித்து பாடியுள்ளார். மூலவராக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம்.
பிரத்யங்கிராதேவி
                      இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். சிம்ம முகம், 18 கரம், சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். கரிய நிறத்துடன் தலையில் சந்திரகலை அணிந்து சூலம், பாசம், டமருகத்துடன் இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் அட்டகாசமாக வீற்றிருக்கிறாள்.
மிளகாய் வத்தல் யாகம்
                   இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்’ நடக்கிறது. மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.    மேலும் 108 வகை ஹோம சாமான்கள் குண்டத்தில் இடப்படும். பட்டு புடவை, பழ வகைகளும் இதில் அடக்கம். யாகம் முடிந்ததும், புனித கலசநீரால் சரபேஸ்வரருக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் அபிஷேகம் நடத்தப்படுகிறது. சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் ஜாதக ரீதியாக சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் நடக்கும் இந்த யாகத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முகவரி
                        அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி – தஞ்சாவூர் மாவட்டம்.

Saturday 5 May 2012

கிரகண காலத்தில் சிவபூஜை


அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில்




தல சிறப்பு: 
அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் 
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
   



மூலவர் : வாஞ்சிநாதேஸ்வரர்

உற்சவர் : -அம்மன்/தாயார் : மங்களநாயகி, வாழவந்தநாயகி
  தல விருட்சம் : சந்தன மரம்.
  தீர்த்தம் : குப்தகங்கை, எமதீர்த்தம்.
  ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : திருவாஞ்சியம்
  ஊர் : ஸ்ரீ வாஞ்சியம்
  மாவட்டம் : திருவாரூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
அப்பர், சம்பந்தர், சுந்தரர்




வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவுகந்ததே.
-திருஞானசம்பந்தர்




தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 70வது தலம்.


 
திருவிழா:
 
  இரண்டாம் நாளே தீர்த்தவாரி : எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.
 
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

பொது தகவல்:
 
 
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது.




இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். கவசமிட்ட கொடிமரம் - பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, "நட்டுவன் பிள்ளையார் சந்நிதி' தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு - சற்று தடித்த உயர்ந்த பாணம். உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சந்நிதிகள் உள்ளன.






 


பிரார்த்தனை
 
  மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.


பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.


 
நேர்த்திக்கடன்:
 
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
தலபெருமை:
 
 
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு
அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.




குப்த கங்கை : ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,''என்றார்.
அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.




கார்த்திகை ஞாயிறு : தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார்.
ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம்  "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.




கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி  எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.






 
  தல வரலாறு:
 
 
"எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.




திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு எமனும், ""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர்.




பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது.
மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும்.




மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.


 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்


 

முகவரி: 
    
  அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம் - 610 110 திருவாரூர் மாவட்டம். 
    
 போன்: 
    
  +91-94424 03926, 93606 02973. 
    


Friday 4 May 2012

மூலிகைக் குடிநீர்

 மூலிகைக் குடிநீர்





நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.


இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.


பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும். உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.


அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.


ஆவாரம்பூ குடிநீர்

"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ.." என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.


நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.


இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.


நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.


இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.


பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.


இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.


துளசி குடிநீர்

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.


அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.


டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.


வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.


இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.


காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.


இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.


கரிசாலை குடிநீர்

"ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி"


என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.


வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.


கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.


இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.


சீரகக் குடிநீர்

சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.


சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.


இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.


ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.


கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.


சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.


மாம்பட்டைக் குடிநீர்

மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.


நெல்லிப்பட்டைக் குடிநீர்

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.


இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.


ஆடாதோடைக் குடிநீர்

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,


சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.


வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.


சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.



பிரண்டை



Add caption

இந்தியாவே மூலிகைகள் நிறைந்த தேசம்தான். நம்நாட்டில் கிடைக்கும் மூலிகைகளே நமது நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளன. காடு, மலைகளில்தான் மூலிகைகள் வளரும் என்பதில்லை. சாலையோரங்களிலும்,வயல்வரப்புகளிலும் கூட மூலிகைகள் தானாக வளர்ந்து நிற்கின்றன. வேலிகளில் படர்ந்து வளரும் பிரண்டை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும்.


இதில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்


இத்தாவரத்தில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.


மருத்துவ மூலிகை

இலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.


மெலிந்த உடல் குண்டாக

ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.


வயிற்றுப் பொருமலால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கி, வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.


பிரண்டை துவையல்

எலும்பு சந்திப்புகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுக்களின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். அவர்கள் முதுகு மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். இந்த நீரானது முதுகுத் தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பின் பசைபோல் முதுகு, கழுத்துப் பகுதியில் இறுகி முறுக்கிக்கொள்ளச் செய்யும். இதனால்தான் இவர்களால் தலையை திருப்பவோ, அசைக்கவோ, குனியவோ முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட சித்தர்கள் பிரண்டை உப்பு, பிரண்டை கற்பக மருந்து போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை செய்துள்ளனர்.


இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பசைபோல் தயாரித்து கழுத்து, முதுகு இடுப்புப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் முறுக்கிய பகுதிகள் இளகி முதுகு வலி, கழுத்துவலி குணமாகும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.


மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.


மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.


ரத்த ஓட்டம் சீராகும்

உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.


பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.


எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும். கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.